கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோயில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில். இந்த கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமியையொட்டி 18 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் திருவிழாவின் 16வது நாளான இன்று கூத்தாண்டவர் கோயில் தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று இரவு திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டு இரவு முழுவதும், ஆடல் பாடல், கும்மியடித்து கொண்டாட்டமாக இருந்தனர். இதனையடுத்து இன்று காலை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கூத்தாண்டவர் எனப்படும் அரவான் சிரசு ஊர்வலம் நடந்தது.
அப்போது தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர். இந்தக் கோயிலின் வரலாறு மகாபாரதத்துடன் தொடர்புடையது. மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற களப்பலி கொடுக்க முடிவு செய்யப்பட்டு 32 அம்சங்கள் பொருந்திய ஆண் மகனை தேடினர். அப்போது கிருஷ்ணர், அர்ஜூனன், அர்ஜூனனுக்கும் நாக கன்னிக்கும் பிறந்த அரவான் என மூவர் மட்டுமே 32 அம்சங்கள் கொண்டவர்களாக இருந்தனர்.
இதில் கிருஷ்ணர், அர்ஜூனன் போருக்கு முக்கியம் என்பதால் அரவானை களப்பலி கொடுக்க கேட்ட போது அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் தனக்கு திருமணம் ஆகாததால் திருமணம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனால் அவருக்கு பெண் தேடிய போது மறுநாளில் உயிரிழக்கவிருப்பவர் என்பதால் எவரும் திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை.
இதனால் கிருஷ்ணர் மோகினி வேடம் தரித்து அவரே அரவானை திருமணம் செய்து கொண்டார். இதனால் தான் திருநங்கைகளுக்கு இந்த கூத்தாண்டவர் கோயில் குலதெய்வமாக கருதப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழாவில் திருநங்கைகள் கலந்து கொண்டு, தாலி கட்டிக் கொண்டு அரவான் பலியிடலுக்கு பின் தாலியை அறுத்துக் கொண்டு கைம்பெண் கோலம் ஏற்கின்றனர்.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் அம்மாவாசை அன்று சாகை வார்த்தலுடன் இந்த திருவிழா தொடங்குகிறது. திருவிழாவில் தினந்தோறும் மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி தினந்தோறும் ஊரைச் சுற்றி வருவது வழக்கம். 16-நாள் திருவிழாவில் கூவாகம் கூத்தாண்டவர் சுவாமிக்கு தேரோட்ட திருவிழா இன்று காலை நடைபெற்றது.
சுவாமி தேர் ஏறுவதற்கு முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து அவரவர்களின் வேண்டுதலுக்கு ஏற்றபடி ஆடு, கோழிகளை பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்டத்தை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
இந்த தேரோட்ட திருவிழாவிற்கு கூவாகம், நத்தவேலி, கொரட்டூர், வேலூர் உட்பட 100- க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும்,
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், சேலம் , கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தில் இருந்து 38 மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, பாம்பே, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேஷியா என பல்வேறு வெளிநாட்டுச் சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்றனர்.
அவர்கள் கூத்தாண்டவர் சுவாமியை தனது கணவராக பூஜித்து முதலாம் ஆண்டு வரும் திருநங்கைகள் மஞ்சள் கொம்பு தாலி, இரண்டாம் ஆண்டு வரும் திருநங்கைகள் வெள்ளி தாலி, மூன்றாம் ஆண்டில் இருந்து தங்கத்தாலான தாலி கட்டிக் கொண்டு வேண்டுதலை நிவர்த்திக்க தேரோட்டம் முடித்து கூவாகம் தொட்டி கிராமத்தில் பந்தளடி என்னும் இடத்தில் கழுத்தில் கட்டியிருந்த தாலியை ச்றுத்து விட்டு வளையல்களை உடைத்து விட்டு வெள்ளைநிற புடவையை கட்டிக்கொண்டு ஒப்பாரி வைத்து அழுது விட்டு, அவர்கள் ஊர்களுக்கு திரும்பினர்.
இந்த தேரோட்டத்திற்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள், திருநங்கைகளுக்கு எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி மோகன்ராஜ், விழுப்புரம் மாவட்ட எஸ்பி மற்றும் நான்கு ஏ.டி.எஸ்.பி.கள் உட்பட்ட 2000 போலீசாரும், வருவாய் துறைச் சார்ந்த தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: Madurai Meenakshi Amman: மதுரை மாநகரில் வலம் வந்த மீனாட்சி.. சித்திரை தேர்த்திருவிழா கோலாகலம்!