களைகட்டிய கூவாகம் திருவிழா விழுப்புரம்: உலக புகழ்பெற்ற கூவாகம் திருநங்கைகள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.சென்னை திருநங்கை நாயக்குகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய இவ்விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாயக்குகள் அமைப்பின் தலைவர் முன்னிஜி நாயக், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி, நா.புகழேந்தி எம்எல்ஏ, நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது, "திருநங்கைகள் எனப் பெயர் சூட்டி, சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்று கொடுத்தவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. அவர் காட்டிய வழியில் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார்.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வாழ்வில் வளமடைவதற்கான பல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். திருநங்கைளுக்கு இடஒதுக்கீட்டை தந்தது மட்டுமில்லாமல், தனி நல வாரியத்தையும் உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். திருநங்கைகள் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக திருநங்கைகள் தினத்தையும் அறிவித்தார் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், திருநங்கைகளுக்கு குறைகேட்பு முகாம், தொழில், பயிற்சி, சுய தொழில் தொடங்க கடனுதவி, அரசுப் பணிகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு, இலவச சமத்துவபுரங்களில் வீடு, அரசுப் பேருந்துகளில் இலவசப்பயணம், மாநிலத் திட்டக் குழுவில் திருநங்கை உறுப்பினர், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவம், பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் உயர் கல்வியில் சேர்ந்துப் படிக்க இடம், மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகப் பதவிகளுக்கு போட்டியிட வாய்ப்பு, ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்று கூறிய பொன்முடி, திருநங்கைகள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து வாழ்வில் வளம் பெறவேண்டும்" என்று வாழ்த்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, திருநங்கை நாயக்குகள் அமைப்பின் நிர்வாகிகளுக்கு அமைச்சர் க.பொன்முடி நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். விழாவில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தபர்களும் பங்கேற்றனர். மேலும் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி நடந்த மிஸ் திருநங்கை 2023 அழகி போட்டியில் சேலம் பிரகதி முதலிடம் பெற்றார். சென்னை வைஷு இரண்டாம் இடமும், தூத்துக்குடி பியூலா மூன்றாம் இடமும் பெற்றனர்.
இதையும் படிங்க: "சட்டப்பேரவையில் எனது பேச்சை ஒளிபரப்புவதில் முதலமைச்சருக்கு பயம்" - ஈபிஎஸ் தாக்கு