தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே ஊராட்சி, ஒரே மாவட்டம் வேண்டி கருப்புக்கொடி போராட்டம்...! - vilupuram taluk vilaagers protest

விழுப்புரம்: ஒரே மாவட்டம், ஒரே ஊராட்சி என்ற கோரிக்கையை வலியுறுத்தி கருவேப்பிலைபாளையம் கிராம மக்கள், தங்களது வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

karuvepilaipalayam village people black flag protest
ஒரே ஊராட்சி; ஒரே மாவட்டம் - கருப்புக்கொடி போராட்டம்

By

Published : Nov 28, 2019, 12:13 PM IST


விழுப்புரத்துக்கு அருகே உள்ளது கருவேப்பிலைபாளையம் கிராமம். இங்கு ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் சில பகுதிகள் விழுப்புரம் மாவட்டத்திலும், மற்றவை கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் உள்ளன. இதேபோல் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் பாதியும், மீதி திருவெண்ணைநல்லூர் தாலுகாவிலும் அடங்கியுள்ளன.

மேலும், திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் காந்தலவாடி ஊராட்சி கருவேப்பிலைபாளையம், திருநாவலூர் ஒன்றியம், சித்தலூர் ஊராட்சி கருவேப்பிலைபாளையம், மடப்பட்டு ஊராட்சி கருவேப்பிலை பாளையம், சுருளாபட்டு ஊராட்சி கருவேப்பிலைபாளையம் என நான்கு ஊராட்சிகளில் உள்ளடக்கிய குக்கிராமமாகவும் கருவேப்பிலைபாளையம் உள்ளது.

ஒரே ஊராட்சி, ஒரே மாவட்டம் வேண்டி கிராம மக்கள் கருப்புக்கொடி போராட்டம்
இதனிடையே திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் என இரண்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்டு கருவேப்பிலைபாளையம் உள்ளதால், இந்த பகுதி மக்கள் தங்களை விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கக் கோரியும், ஒரே ஊராட்சியாக மாற்ற வலியுறுத்தியும் வீடுகளில் கருப்புக்கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதில் கருவேப்பிலைபாளையம் கிராமத்தின் சில பகுதிகள் விழுப்புரம் மாவட்டத்திலும், மற்றவை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளன. ஒவ்வொரு தெருவும் ஒவ்வொரு ஊராட்சியாக உள்ளது. இதேபோல் அரசின் திட்டங்கள், கிராம பஞ்சாயத்து வேலைகள் உட்பட எதுவாக இருந்தாலும் திசைக்கு ஒருவராக அலைய வேண்டியுள்ளது.
கல்விக் கடன், விவசாயக் கடன் தொடர்பாக வங்கி அலுவலர்களை அணுகினால் எல்லையை காரணம் காட்டி கடனுதவி அளிக்க மறுக்கின்றனர். இது தொடர்பாக பலமுறை ஆட்சியரை சந்தித்து மனு அளித்தும் பயனுமில்லை. கள்ளக்குறிச்சியில் நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட தொடக்க விழாவில் எங்கள் பகுதி பிரச்னைக்கு முதலமைச்சர் பழனிசாமி முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால், எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த கிராமத்தில் இருந்து விழுப்புரம் 15 கிலோமீட்டர் தொலைவிலும், கள்ளக்குறிச்சி 100 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. எனவே, எங்களை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைத்தும், ஒரே ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம், இவ்வாறு தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details