விழுப்புரம்:கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி கடந்த மாதம் 13ம் தேதி, பள்ளி விடுதி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் உடல் 2 முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்தப் பிரேத பரிசோதனையில், தங்களுக்கு நம்பிக்கை இல்லை என மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதனை தொடர்ந்து மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த தடயவியல் துறை பேராசிரியர்களான திரு.குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா உள்ளிட்ட 3 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவை உயர்நீதிமன்றம் அமைத்தது.