விழுப்புரம்: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏவும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் கடந்த நவ.27ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கட்சி சார்பாக ஒரு புறம் நிகழ்ச்சிகள் நடக்கிறது என்றால் அவரின் தீவிர ரசிகர் மன்றங்கள் சார்பாக தொடர்ச்சியாகப் பல நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.
அதன்படி விழுப்புரம் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில், அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் 1008 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணி கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர்,”உதயநிதி ஸ்டாலின் வருகைக்குப் பின் திமுக இளைஞரணி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. அவரது செயல்பாடுகள் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. பலருக்கு உயர் பதவிகளான சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல பதவிகளை வாங்கி கொடுத்து அழகு பார்த்தவர் உதயநிதி ஸ்டாலின், ஆனால் அவர் இன்று வரை சாதாரண சட்டமன்ற உறுப்பினராகவே பொறுப்பில் இருக்கிறார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக நியமிக்க வேண்டும். இது நான் முதல்வருக்கு வைக்கும் கோரிக்கை. அப்பொழுது தான் தமிழகம் முழுவதும் அவருடைய பணிகளால் பலனடையும். தமிழக மக்கள் அனைவரும் அவருடைய பின்னால் இருக்கிறார்கள். வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் உதயநிதி ஸ்டாலின் திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியை நிச்சயம் பெற்றுத் தருவார். உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் சார்பாகவும் இந்த கோரிக்கையைத் தமிழக முதல்வரிடம் முன்வைக்கிறோம்" எனப் பேசினார்.