தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி ஆட்சி செலுத்தி வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை மீண்டும் அக்கட்சி கையில் எடுத்துள்ளது. அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பிரபு ஆகியோர் தகுதி நீக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக அதிமுக கட்சிக்குள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு செய்தியாளர்களிடம் கூறியதாவது,
”அரசு கொறடா மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென பரிந்துரை செய்வதாக கூறியதை பார்த்தேன். எதற்காக தகுதி நீக்கம் பண்ண வேண்டும் என்று தெரியவில்லை. நான் அதிமுக கட்சியில்தான் இருக்கிறேன். அக்கட்சிக்கு எதிராகவோ, அரசு கொறடாவிற்கு எதிராகவோ சட்டப்பேரவையில் நான் எதுவும் வாக்களிக்கவில்லை. இந்த அரசாங்கத்திற்கும், அரசு கொறடாவிற்கும் கட்டுபட்டுதான் செயல்பட்டு வருகிறேன்.
நான் திமுகவிற்கோ, காங்கிரஸூக்கோ, பாஜகவிற்கோ ஆதரவாக செல்லவில்லை. தற்போது ஆட்சியில் உள்ளவர்களால் தேர்ந்தெடுக்கபட்ட பொதுச்செயலாளர் சசிகலாவோடுதான் இருக்கிறேனே தவிர, ஸ்டாலினிடமோ, சோனியா காந்தியிடமோ நான் இல்லை. ஆனால் அதிமுக கட்சியில்தான் நான் இருக்கிறேன். அதிமுக உறுப்பினராகவும் தொடர்ந்து வருகிறேன். அப்படி இருக்கும்போது எதற்காக என்னை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. அதற்குண்டான நடவடிக்கைகள் நோட்டீஸ் வந்தவுடன் சட்ட ரீதியாக சந்திப்பேன்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்வு செய்ய வாக்களித்தவன் நான். அவர் முதலமைச்சராக அமருவதற்கு நானும் ஒரு காரணம். இருக்கிற சட்டப்பேரவை உறுப்பினர்களில் நானும் ஒருவனாக வாக்களித்தேன். ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் எடப்பாடிக்குத்தான் வாக்களித்தார்கள். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. இப்போது என்னை தகுதி நீக்கம் செய்ய போகிறார்கள் என்று சொன்னால் அதனை பார்க்கும்போது, ஜெயலலிதா இல்லாத காரணத்தினால் இதுபோன்ற தவறு நடக்கிறது, என்றார்.