'ஜெய்பீம்' பட பாணியில் மீண்டும் ஓர் கொடூரம்.. கண்ணீர் வடிக்கும் இருளர் இன மக்கள்! விழுப்புரம்: ஒரு காலத்தில் வேட்டையாடும் தொழிலை மட்டுமே செய்த இருளர் சமூக மக்கள் பிற்காலத்தில் பண்ணைகளில் காவல் வேலை செய்து வந்து தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினர். தற்போது இவர்களின் பிரதான தொழிலாக கருதப்படுவது செங்கல் சூளையில் கல் அறுப்பது, கட்டிட வேலைக்கு செல்வது. இவர்கள் பெரிய அளவில் கல்வி ஈடுபாடு இல்லாதவர்களாக எங்காவது ஒரு செங்கல் சூளையில் குடும்பத்தோடு வேலை செய்து வருகின்றனர்.
இருளர் சமூக மக்கள் பலருக்கு இன்றளவும் மத்திய அரசால் வழங்கப்படும் இந்திய குடிமகன் என்பதற்காக வழங்கப்படும் ஆதார் அட்டையோ, வாக்காளர் அடையாள அட்டையோ கூட இன்றளவும் இவர்களிடம் இல்லை. பல சமயங்களில் இவர்கள் மீது காவல்துறையினரால் போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்காக வாதாட யாரும் இல்லாத நிலையில் சிறை வாசமும் அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் 11 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வழக்கு ஒன்றில் குற்றவாளியை தேடி வருவதாக ஆனந்தபுரம் பகுதிக்கு வந்த புதுச்சேரி காவலர்கள் ஆறு பேர் அத்தியூர் விஜயா என்கிற இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்திய வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் 6 பேருக்கும் ஆயுள் தண்டனை கொடுத்தது.
இதுபோன்ற பல வழக்குகள் இருளர்கள் மீது சுமத்தப்பட்டு அவை நிரூபிக்கப்படாமல் போன வரலாறும் உண்டு. கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை இது போன்ற கேட்பதற்கு நாதியற்ற மக்கள் மீது திணிக்கும் செயலில் தொடர்ந்து போலீசார் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படிதான் மீண்டும் இப்போது ஒரு வழக்கு கவலைக்குரியதாக உள்ளது. புதுச்சேரி-விழுப்புரம் எல்லையான வானூர் வட்டத்திற்கு உட்பட்ட குமாரபாளையம் அருகில் உள்ளது ஐவேலி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், ரமேஷ் ஆகிய இருவரும் களிங்க மலைப்பகுதியில் ஒரு செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.
இந்த செங்கல் சூளையில் வேலை செய்யும் பழங்குடியினர்களான செங்கேணி, அப்பு, ஐயப்பன், மற்றும் ஒரு செங்கேணி, கன்னியப்பன், சங்கர் அருணாச்சலம், கார்த்தி, சூளை உரிமையாளர் ரமேஷ் ஆகிய 9 பேரை காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் மூன்று நாட்களாக வைத்து கடுமையாக சித்தரவதை செய்ததாக அந்த அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும் விசாரணை என்கிற பெயரில் செங்கல் சூளையில் வேலை செய்து வரும் கற்பகம், அவருடைய மகள் கார்த்திகா, செங்கேணியின் மனைவி ராஜி, ரமேஷின் மனைவி சித்ரா மற்றும் ஜெயலட்சுமி, அவரது மகள் மாலதி, மகன் சந்தோஷ் அருணாச்சலம் ஆகியோரையும் கடுமையாக தாக்கியதோடு பெண்கள் என்று பாராமல் மானபங்கப்படுத்தியதாகவும் தெரிவிக்கிறார்கள்.
என்ன காரணம் இவர்களை தாக்க?தமிழ்நாடு - புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களிலும் வீடுகளில் கொள்ளை அடித்ததாக இரண்டு மாநிலங்களிலும் ஒன்பது வழக்குகள் இவர்கள் மீது போடப்பட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், 400 கிராம் தங்கம் வெள்ளி போன்ற பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், 21 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இருவர் சிறுவர்கள் என ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். மீதமுள்ள ஐந்து பேரும் புதுச்சேரி சிறையில் தான் தற்போது வரை இருந்து வருகிறார்கள். கைது நடவடிக்கைகள் பற்றி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஜெயலட்சுமி கூறியதாவது, “அன்று இரவு திடீரென்று போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என்று சோதனை செய்தார்கள். அப்போது என்னுடைய மகள் சடங்கு (பூப்புனிதல்) புகைப்படம் இருந்தது.
அதை எடுத்து பார்த்து விட்டு யார் என்று கேட்டார்கள், என் மகள் என்றதும் கழுத்தில் போட்டு இருக்கிற நகைகள் எல்லாம் எங்கே கொள்ளை அடித்தீர்கள் என்று கேட்டார்கள். அவை அனைத்தும் கவரிங் நகைகள் என்று சொல்லியும் கூட எங்களை விடவில்லை. என்னுடைய தங்கை கணவரை அழைத்து வந்து என்னிடம் அவர் கொடுத்த ஐந்து சவரன் நகை எங்கே என்று கேட்டார்கள். அப்படி எதுவும் அவர் என்னிடம் கொடுக்கவும் இல்லை என்று நான் சொன்னேன். என் தங்கையின் கணவரை சித்திரவதை செய்ததாக அவர் அழுதார்” என்கிறார் ஜெயலட்சுமி.
அடுத்ததாக பேசிய கற்பகம், “ஆதார் கார்டு கொடு என்று போலீசார் கேட்டார்கள். ஏன் எதற்கு என்று கேட்டபோது வீட்டிற்குள் புகுந்து பொருட்களை களைத்து போட்டு ஆதார் கார்டை தேடுவதில் குறியாக இருந்தார்கள். பின்னர் என் கணவர் எங்கே என்று கேட்டபோது எதுவும் சொல்ல மறுத்த பிறகு தான் தெரிந்தது என் கணவரை அடித்து சித்திரவதை செய்து காவல் நிலையத்தில் வைத்திருக்கிறார்கள் என்று. அதன் பின்னர் அவரைப் பார்க்க சென்றபோது அவரை சிறைக்கு அனுப்பி விட்டதாக சொன்னார்கள்”என்கிறார் அழுகையோடு.
இது பற்றி பழங்குடியினர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர் பேராசிரியர் கல்யாணி இடம் கேட்டபோது, “தமிழ்நாடு புதுச்சேரி எல்லையில் செங்கல் சூளையில் வேலை செய்கிற ஏழு பேர் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு மயிலம், கண்டமங்கலம், புதுச்சேரி ஆகிய இடங்களில் கொள்ளையடித்ததாகவும், 21 லட்ச ரூபாய் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், 21 தங்க நாணயங்கள் திருடப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறார்கள்.
இது முழுக்க முழுக்க பொய் வழக்கு. மனித உரிமை மீறல், பெண்களை அவமானப்படுத்தி இருக்கிறார்கள், எத்தனை ஜெய்பீம் படம் வந்தாலும் கூட இந்த போலீசார் திருந்த போவதில்லை. சட்டப்படி இந்த பிரச்சினையை எதிர்கொள்வோம்” என தெரிவித்தார். இப்படி சமூக ரீதியாக தங்களைத் துரத்தும் துன்பத்தில் இருந்து தங்களுக்கு விடுதலையே இல்லையா என நீதிமன்றம் முன்பு மன்றாடிக் காத்துக் கிடக்கிறார்கள் இந்த பழங்குடி இருளர் மக்கள்.
இதையும் படிங்க: தனியார் பஸ்ஸை இயக்கி விபத்தை ஏற்படுத்திய போக்குவரத்து காவலருக்கும் ஓனருக்கும் இடையே வாக்குவாதம்