விழுப்புரம்:தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் மற்றும் அதைத் தொடர்ந்து காணும் பொங்கல் ஆகிய தினங்களில் தமிழக கிராமங்கள் தோறும் மஞ்சுவிரட்டு, கபடி, வழுக்கு மரம் ஏறுதல், இளவட்டக் கல் தூக்குதல் மற்றும் தெரு முனை நாடகம் ஆகிய நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களான பாண்டுர், களமருதூர், காம்பட்டு, ராஜபாளையம், ஏமம், ஆதனூர், பிள்ளையார் குப்பம், பெரியசெவலை, சேந்தநாடு, குமாரமங்கலம், நெய்வானை மற்றும் பில்ராம்பட்டு ஆகிய பகுதிகளில் மஞ்சுவிரட்டு மற்றும் இளவட்டக்கல் தூக்குதல் ஆகிய போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்று நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட, இளவட்டக்கல் போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உருண்டை வடிவிலான கல்லை தன்னுடைய நெற்றிப் பொட்டு வரை தூக்கி கீழே வீச வேண்டும் இவ்வாறாக மிகவும் கனமான இளவட்டக்கல்லைப் பல இளைஞர்கள் தங்களுக்கான வீரமாக நினைத்து ஊர் பொதுமக்கள் முன்னே தூக்கி வீசி பரிசுகளை வாங்கிச் செல்வார்கள்.
இத்தகைய போட்டிகளில் கலந்து கொள்ள அக்காலத்தில் இளைஞர்கள் தங்களுடைய உடல் அமைப்பை முறுக்கேற்றி இதற்கான போட்டிகளில் பங்கேற்பார்கள். தற்போது இது போன்ற போட்டியில் பங்கேற்கும் பல இளைஞர்கள் வெற்றி பெற்றாலும், பல இளைஞர்கள் அதிகப்படியான பாரம் தூக்குவதால் உயிரிழப்பு மற்றும் மூச்சுப்பிடிப்பு ஆகிய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் தற்போது வரை சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.