விழுப்புரம்:முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று(ஏப்ரல்.2) கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விழுப்புரத்திற்கு வருகை தந்தார். அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக விழுப்புரத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஈபிஎஸ் பேச்சு பின்னர் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈபிஎஸ், அதிமுக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்கள் விகித்த பொதுச் செயலாளர் பதவியை எனக்கு வழங்கி இருக்கிறீர்கள், அனைத்து தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எனது மகத்தான மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும், முடக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழகம் எத்தனையோ சூழ்ச்சிகளை செய்கிறது. அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடித்து, இந்த பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக சில சூழ்ச்சியாளர்கள் நம்மிடமிருந்து பிரிந்து தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கைகோர்த்து, அவர்களது பி டீமாக இன்றைக்கு செயல்பட்டு கொண்டுள்ளனர், அவர்களையெல்லாம் நீதிமன்றத்தின் மூலமாக சட்டத்தின் மூலமாக வென்று, இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றுவோம்.
இன்றைக்கு திமுக ஆட்சியில் அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அத்தனையும் சட்டரீதியாக சந்தித்து தகர்த்தெறிவோம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்து சோதனைகளை சந்தித்துக் கொண்டுதான் உள்ளோம், எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை வென்றெடுத்து வெற்றி பெறுவோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியை தொடர்ந்து செய்வோம். அதிமுகவை யார் சீண்டிப் பார்த்தாலும் அவர்கள்தான் அழிவார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரலாம். வரும் 2024-ல் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற பொழுது சட்டமன்ற தேர்தலும் வரும், நமக்கு விடிவு காலம் பிறக்கும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் 9 தொகுதிகளில் பாஜக தீவிர கவனம்: எல்.முருகன் கருத்தால் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு