தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரலாறு தெரியாமல் பேசும் அண்ணாமலை - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

மொழிக் கொள்கைகளில் சுதந்திரமாக செயல்படவிடுங்கள் என்று வைத்த கோரிக்கையை அண்ணாமலை புரிந்துகொள்ள வேண்டும். மாறாக, அண்ணாமலை இதனை கொச்சைப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

By

Published : Jul 31, 2022, 9:36 AM IST

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஊராட்சி முகமை அலுவலகத்தில் விவசாயிகளின் குறை தீர்ப்பு கூட்டம் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில்கீழ் நேற்று (ஜூலை 30) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், 'அண்ணாமலையின் கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை; வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார். இருந்தாலும், நான் ஒரு வரலாறு பேராசியர் மற்றும் அமைச்சர் என்கிற முறையில் பதிலளிக்கிறேன்.

விவசாயிகளின் குறை தீர்ப்பு கூட்டம்

திராவிடம் என்ற வார்த்தை 1800-களில் தோன்றியதாக அண்ணாமலை கூறுகிறார். ஆனால், 'திராவிட மாடல்' என்பது திராவிட இயக்கமல்ல கற்கால சிந்து சமவெளி நாகரிகம் தோன்றியபோதே தோன்றியது. இத்தகைய வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார். மத்திய அரசின் புதிய கல்விகொள்கை என்று கூறுகிறார்கள். அதேபோல, தமிழ்நாட்டிற்கு என்று கல்விக் கொள்கை வடிவமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு குழுவை நியமித்து செயல்பட்டு கொண்டு வருகிறார்.

மேலும், பிரதமரிடம் நிதி அளிக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு முதலமைச்சர் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்றுதான் அன்பாக கேட்டுக்கொண்டேன். அதனை பிரதமரும்
ஏற்றுக்கொண்டார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

கோரிக்கைகளை கொச்சைப்படுத்துவதா?ஆனால், நான் என்ன கோரிக்கை வைத்தேன் என்பது கூட தெரியாமல் அண்ணாமலை கொச்சைப்படுத்துவது போல் பேசி வருகிறார். தமிழ்நாட்டில் உயர்கல்வி என்பது தற்போது மிகவும் உயர்ந்திருக்கிறது.

மேலும், கல்வி சார்ந்த தரத்தை உயர்த்த வேண்டும் என்பதால் "நான் முதல்வன்" என்ற திட்டத்தை தொடங்கிவைத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் துறை சார்ந்த இன்டர் டிசிபிளைனரி (Inter Disciplinary) என்ற புதிய பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

அந்த காலத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் கல்வி அறிவு பெற்றனர்?. குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே கல்வி அறிவு பெற்றனர். பலர் பள்ளிக்குள்ளே நுழைய முடியாமல் படிப்பதற்கு வாய்ப்பு இல்லாமலும் இருந்தனர்.

உயர்கல்விக்கு ஆகும் செலவு: அனைத்து சமுதாயத்தினரும் ஆண்களும், பெண்களும் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். மத்திய அரசு நான்காண்டுகளில் உயர்கல்விக்கு ரூ.6 ஆயிரத்து 664 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்கியதாக அண்ணாமலை கூறுகிறார். தமிழ்நாடு அரசு மட்டும் ஒரு ஆண்டிற்கு உயர்கல்விக்காக 5 ஆயிரத்து 666 கோடி ரூபாய் கல்விக்காக செலவு செய்கிறது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி

அண்ணாமலை புரிந்துகொள்ள வேண்டியது:மொழிக் கொள்கைகளில் சுதந்திரமாக செயல்படவிடுங்கள் என்றுதான் கோரிக்கை வைத்தேன். இதனை, அண்ணாமலை புரிந்துகொள்ள வேண்டும். அடித்தட்டு மக்களும் பயன்பெற வேண்டும் என்று உழைப்பதுதான் இந்த இயக்கம்; இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் 53 விழுக்காட்டினர் உயர்கல்வி பெற்றுள்ளனர்.

இதனை அண்ணாமலை கொச்சைப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை. மத்திய அமைச்சர் எல்.முருகனைப் போன்று பெரிய பதவிகளுக்கு வரவேண்டும் என அண்ணாமலை வரலாறு தெரியாமல் எதையாவது பேசிக்கொண்டிருக்கிறார்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக, பாஜக கூட்டணி வராது - அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details