விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் பங்கேற்றனர்.
பாதிப்பு குறைவு
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் மே 11ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கின் காரணமாக, கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் குறைந்துள்ளது. தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனாவை முழுமையாக கட்டுபடுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,"தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் தொற்றின் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறாததும், மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகு சிகிச்சைக்காக வருவதாலும்தான் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.
கரோனா, கறுப்புப் பூஞ்சை நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு, மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.