செட்டாப் பாக்ஸ்களை ஒப்படையுங்கள்: ஆட்சியர் எச்சரிக்கை
விழுப்புரம்: பயன்பாட்டில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களை வாடிக்கையாளர்கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.,
"விழுப்புரம் மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் 73,570 வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட சேனல்கள் அடங்கிய ஒளிபரப்பு சேவை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் செட்டாப் பாக்ஸ்களை பெற்று கேபிள் ஒளிபரப்பு சேவை பெற்று வந்த வாடிக்கையாளர்களில் சுமார் 12,680 வாடிக்கையாளர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை கேபிள் ஒளிபரப்பு சேவைக்காக தொடர்ந்து பயன்படுத்தாமலும், அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்காமலும் தங்கள் வசமே வைத்துள்ளனர்.
இதனால் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கும், அரசுக்கும் பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
அரசு கேபிள் டிவியின் செட்டாப் பாக்ஸ்கள் கேபிள் ஒளிபரப்பு சேவையை பெறுவதற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.
அதனை வாடிக்கையாளர்கள் யாரும் தங்களது உரிமை என கொண்டாட முடியாது.
எனவே பயன்படுத்தாத அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை விழுப்புரம் துணை மேலாளர்/தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தவறினால் தக்க குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.