கல்விதான் ஒருவனை பண்பாளனாகவும், அறிவாளியாகவும், மரியாதைக் குரியவராகவும் மாற்றுகிறது. அறியாமை என்னும் இருளை போக்க நமக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஆயுதம் கல்விதான். அப்படிப்பட்ட கல்வியை கற்பதில்தான் இங்கு சமூகம் சார்ந்த சிக்கல்களும் உள்ளன. கல்வி ஒருவனை மட்டும் உயர்த்தாது அவனைச் சார்ந்துள்ள சமுதாயத்தினரையும், அந்த மக்களின் வாழ்வியலையும் மேம்படுத்துகிறது. கல்வி இன்றளவும் ஒரு சிலருக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது. கல்வி எப்பொழுது வணிகமயமாக்கப்பட்டதோ அப்பொழுதே கல்வியின் தரமும் மாணவர்களின் எதிர்காலமும் கவலைக்கிடமான நிலையில்தான் உள்ளது.
அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி, உதவித்தொகை, சீருடைகள், புத்தகங்கள், புத்தகப்பை, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணிணிகள், சிறப்பு வகுப்புகள் என பல்வேறு வசதிகளை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. ஆனால் மக்கள் தனியார் பள்ளிகள் அறிவிக்கப்படும் விளம்பர மோகத்தை கண்டு தனது குழந்தையும் ஆங்கிலம் கற்க வேண்டும் பேராசையில் வட்டிக்கு பணத்தை பெற்று படிக்க வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.
தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்துடன் அரசு பள்ளிகளில் இருப்பதில்லை என்று குறை கூறும் குழந்தைகளின் பெற்றோர்கள் அரசு பள்ளிகளை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று யாரும் யோசிப்பதில்லை. ஆனால், விழுப்புரம் மாவட்டம் நன்னாடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல உதவிகளை செய்து வருகின்றனர். நன்னாடு பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 1953ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும்.
இந்த சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 68 குழந்தைகள் நன்னாடு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி மற்றும் ஆசிரியைகள் சுமதி, ஆதி ஆகியோர், இங்கு பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதுடன், ஒழுக்க செயல்களிலும், தனிதிறமைகளை வெளிக்கொணர்ந்து சிறப்பான பயிற்சியினை அளித்து வருகின்றனர். மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தங்களது சம்பள பணத்தில் ஒரு பகுதியை செலவழித்து இலவசமாக ஆங்கில பயிற்சி (ஸ்போக்கன் இங்கிலிஷ்) யோகா பயிற்சி ஆகிய வகுப்புகளை நடத்தி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் அகலமான மேசையுடன் கூடிய இருக்கை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பாதுகாப்பான விளையாட்டு அரங்கம், காற்றோட்டமான வகுப்பறைகள், நவீன கழிவறைகள், யோகா மற்றும் கணினி பயிற்சி, பளபளக்கும் டைல்ஸ் தரை தளம் என அனைத்துவிதமான அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல லட்சம் செலவு செய்து தனியார் பள்ளியில் சேர்ப்பதை விட, இந்த பள்ளியில் சேர்ப்பதையே பெருமையாக எண்ணி பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நன்னாடு பள்ளிகளின் அருமை பெருமைகளை தெரிந்துக் கொண்ட காணை பகுதியை சேர்ந்த சிவபிரகாஷ் - சுபாஷினி தம்பதியினர், லண்டனில் படித்த தனது மகனை இப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்து மேலும் சிறப்பு சேர்த்துள்ளனர். இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்களை தங்கள் பிள்ளைகள் போல் பாவித்து நடத்துவதால், தங்களது மகனை நன்னாடு பள்ளியில் சேர்த்ததாக கூறுகின்றனர் அந்த தம்பதியினர்.
நன்னாடு ஊராட்சி தொடக்கப்பள்ளி இத்தகைய பல சிறப்புகளின் காரணமாக, இந்த அரசு பள்ளி தமக்கென தனித்த அடையாளத்தை பெற்றிருப்பதுடன் மக்களின் அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெற்று வளர்ந்து வருகிறது. நன்னாடு அரசு பள்ளி விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டுமல்ல; மாநிலத்திற்கும் முன்மாதிரியான அரசுப்பள்ளி என்பதில் ஐயமில்லை.