விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கெடார் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையிலான நந்தன் கால்வாய் திட்டத்தைத் தொடங்காமல், அதற்கு நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருவதாக அதிமுக அமைச்சர்கள் பொய் பரப்புரை செய்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த அரசு அமையாததால் திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனது.
இந்த ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் எல்லாம் ஊழல் அரசு காரணமாக வெளி மாநிலத்துக்கு சென்று விட்டன.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற தமிழக அரசின் பொய் வாக்குறுதிகளை நம்பி இதுவரை 7 மாணவிகள் உயிரிழந்துவிட்டனர். இதற்கு எடப்பாடி அரசுதான் முழு காரணம்.
பரப்புரையில் ஈடுபட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுக்கவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டிய டெல்டா பகுதிகளில், ஹைட்ரோகார்பன் எடுக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று வைகோ குற்றம் சாட்டினார்.