வட தமிழ்நாடு மாவட்டங்களில் சிறப்பு பெற்ற ஆட்டுச் சந்தைகளில் விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி ஆட்டுச் சந்தையும் ஒன்று. இச்சந்தையில் விரும்பும் இன ஆடுகள், திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமல்லாமல், விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்டு வியாபாரிகளும், பொதுமக்களும் இச்சந்தைக்கு வருவது வழக்கம்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் சராசரியாக 1,000 முதல் 3,000 வரையிலான ஆடுகள் வரை விற்பனையாகிவருகின்றன.
தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், பக்ரீத் ஆகிய பண்டிகைகளின்போது இந்தச் சந்தையில் ஆடுகள், மாடுகள் விற்பனை வழக்கத்தைவிட கூடும். அந்தவகையில், எதிர்வரும் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று (ஜன. 08) செஞ்சி ஆட்டுச் சந்தையில் அதிகாலை 2 மணி முதல் அதிக அளவு வியாபாரிகளும், பொதுமக்களும் ஆடுகளை வாங்க வருகைதந்ததால் வாரச்சந்தை களைகட்டியது.