தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சந்திரயான்-3 வெற்றி; பெயருக்கு ஏற்றார் போல் உலகிற்கே வீரனாக திகழ்கிறார் - வீரமுத்துவேல் தந்தை பெருமிதம்! - சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநர் வீரமுத்துவேல்

Chandrayaan-3 Success Scientist Veeramuthuvel Family Celebration: சந்திரயான் - 3 வெற்றியைத் தொடர்ந்து இந்த திட்டத்தின் மூளையாக திகழ்ந்த விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் குடும்பத்தினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பேட்டியளித்த வீரமுத்துவேல் தந்தை பழனிவேல்
பேட்டியளித்த வீரமுத்துவேல் தந்தை பழனிவேல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 7:39 AM IST

பெயருக்கு ஏற்றார் போல் உலகிற்கே வீரனாக திகழ்கிறார் - வீரமுத்துவேல் தந்தை பெருமிதம்

விழுப்புரம்:நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் - 3 விக்ரம் லேண்டர் நேற்று (ஆகஸ்ட் 23) மாலை தரையிறங்கி சரித்திரம் படைத்து உள்ளது. இந்த நிலையில் இத்திட்டத்தின் மூளையாக செயல்பட்ட விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். விஞ்ஞானிகள் நிலவின் தென் துருவத்தை மிக முக்கிய பகுதியாக கருதுகின்றனர்.

நிலவின் தென் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உலக நாடுகள் பல முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் உலகமே உற்றுநோக்கும் தருணத்தில் நேற்று (ஆகஸ்ட் 23) சந்திரயான் - 3 நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியது.

இந்த திட்டத்தின் இயக்குநராக பணியாற்றியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் என்ற விஞ்ஞானி. இவர் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரயான் - 3 திட்டத்தின் இயக்குநராக 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான பழனிவேலின் மகனான வீரமுத்துவேல் 1978 ஆம் ஆண்டு பிறந்தவர்.

விழுப்புரம் ரயில்வே பள்ளியில் தனது ஆரம்பகால படிப்பை முடித்தார். பின்னர் பாலிடெக்னிக்கில் பயின்று சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். அதன் பின் திருச்சி REC கல்லூரியில் பொறியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். 2004 ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சந்திராயன் மூன்று (chandrayaan - 3) வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியதை கொண்டாடும் வகையில் அவரது தந்தை மற்றும் அவரது உறவினர்கள் விழுப்புரம் வ.உ.சி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அக்கம் பக்கத்தினருடன் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து சந்திரயான் - 3 திட்டத்தின் இயக்குநரான வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், சந்திரயான் 3யின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் உலகிலேயே முதன்முதலாக விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் இந்தியா ஏவியுள்ளது. இது இந்தியாவிற்கு கிடைத்த பெருமை. சந்திரயான் 3 திட்டத்திற்கு எப்போது இயக்குநராக என் மகன் ஆனாரோ அப்போது முதல் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. வீரமுத்துவேல் என்ற பெயருக்கு ஏற்ப இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே வீரனாக திகழ்கிறார் என் மகன்” என்றுக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:Veeramuthuvel: சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் படித்த கல்லூரியில் மாணவர்கள் கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details