தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் பைனான்சியர் வெட்டி கொலை! - villupuram district news

Villupuram crime: வட்டிக்கு பணம் கேட்டு தராத ஆத்திரத்தில் பைனான்சியரை கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Villupuram financier murdered
விழுப்புரம் பைனான்சியர் கொலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 8:57 AM IST

விழுப்புரம்:சித்தேரிக்கரை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் என்கிற ராம்குமார் (30). இவர், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த பலரிடம் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீராம், தனது மோட்டார் சைக்கிளில் சித்தேரிக்கரை ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்த ஒருவர், திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில், தான் வைத்திருந்த வீச்சரிவாளால் தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே இது குறித்து விழுப்புரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஆபத்தான நிலையில் இருந்த ஸ்ரீராமை மீட்ட காவல் துறையினர், சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பின்னர் அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

முன்விரோதம்:ஸ்ரீராம் பல நாட்களாக வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 19ஆம் தேதியன்று அதே பகுதியைச் சேர்ந்த குமார் மகன் பாலாஜி (27) என்பவர், ஸ்ரீராமிடம் சென்று ரூ.2 ஆயிரம் கடனாக தரும்படி கேட்டுள்ளார். அதற்கு, எந்த வேலையும் பார்க்காமல் ஊதாரித்தனமாக சுற்றி வரும் உனக்கு பணம் கொடுத்தால், எனக்கு எப்படி வட்டியுடன் தருவாய் என்று கூறி பணம் இல்லை என ஸ்ரீராம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஸ்ரீராமை தாக்கியுள்ளார். இது குறித்து பாலாஜி மீது நகர போலீசில் ஸ்ரீராம் புகார் கொடுத்துள்ளார்.

இதனால் ஸ்ரீராம் மீது பாலாஜிக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. தன்னைப் பற்றி போலீசில் புகார் கொடுத்த ஸ்ரீராம் உயிரோடு இருக்கக்கூடாது என்று கருதி, அவரை கொலை செய்ய பாலாஜி திட்டம் தீட்டியுள்ளார். இந்த சூழலில் சித்தேரிக்கரை ரயில்வே கேட் அருகில் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீராம் தனியாக செல்வதை நோட்டமிட்ட பாலாஜி, கஞ்சா போதையில் ஸ்ரீராமை வழிமறித்து, தான் வைத்திருந்த வீச்சரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு, தலைமறைவாக இருக்கும் பாலாஜியை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஸ்ரீராமுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு பெண் குழந்தையும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

இதையும் படிங்க:"கெஞ்சிப் பார்த்தேன் கேட்கல அதான் கொன்னுட்டேன்.. என்னை தூக்துல போடுங்க" - நெல்லை இளம்பெண் கொலையில் கைதான சிறுவன் கதறல்!

ABOUT THE AUTHOR

...view details