விழுப்புரம்:தமிழ்நாடு காவல்துறை சிறப்பு டிஜிபி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பெண் காவல் கண்காணிப்பாளர், ஏப்ரல் மாதம் புகார் அளித்தார். இதையடுத்து, சிறப்பு டிஜிபி, அவருக்கு உதவிய செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சிறப்பு டிஜிபி, எஸ்பி மனு
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்ற வரம்புக்குள் வராது, வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே போல் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி தரப்பில், வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, எனவே என்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தார்.
பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை - சிறப்பு டிஜிபி, எஸ்பி மனு தள்ளுபடி விழுப்புரம் நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம்
இந்த மனுக்கள் மீதான இருதரப்பு விவாதம் முடிந்து, இன்று(அக்.4) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி மட்டும் ஆஜரானார். அப்போது நீதிபதி கோபிநாத் முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து, வழக்கை விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது எனக் கூறி உத்தரவிட்டார்.
மேலும் நீதிமன்ற இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த முன்னாள் எஸ்பியை, நீதிமன்றத்தில் இதுபோன்று அமரக்கூடாது, அப்படி அமர்ந்தால் கூண்டில் ஏற்றி நிற்க வைக்கப்படும் என கண்டித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கை அக்டோபர் 8 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: மதுரையில் குழந்தைகள் விற்பனை வழக்கு - காப்பகத்தின் உதவியாளருக்குப் பிணை