விழுப்புரம்: திருக்கோவிலூர் தாலுகா பகுதிக்குட்பட்ட பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த கர்ப்பிணி உள்பட 4 பெண்களை விசாரணைக்காக திருக்கோவிலூர் காவல் நிலையம் அழைத்துச்சென்று அங்கு அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய திருக்கோவிலூர் காவல் துறை இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் உள்ளிட்ட 5 பேர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி.வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்வழக்கில் கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கடந்த 14ஆம் தேதி விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் சரணடைந்து ஜாமீன் மீதான மனுவை சமர்ப்பித்தார், அவருடைய ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளுபடி செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்தனர்.