கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மடப்பட்டு நான்கு முனை சந்திப்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்திய பொருளாதாரம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் நிதி ஆய்வு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்தியாவில் இரண்டு ஆண்டுகளில் வறுமையும், பசியும் அதிகரித்திருப்பதாகவும், வருமானம் ஏற்றத்தாழ்வு மிக உயர்ந்திருப்பதால் இந்தியாவில் இருக்கின்ற 25 மாநிலங்களும், ஒன்றிய பிரதேசங்களும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு பின்னடைவைச் சந்தித்து எட்டாவது இடத்தில் இருக்கிறது. வருமானம் ஏற்றத்தாழ்வு என்ற விகிதத்தில் இந்தியாவில் தமிழ்நாடு ஆறாவது இடத்திற்கு வந்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடை ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற அதிமுகவின் மிக மோசமான ஆட்சிக்கு நிதி ஆயோக்கின் அறிக்கை சான்றாக அமைந்திருக்கிறது.