விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இதற்காக கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர் ஆறுமுகம் என்பவரிடம் விநாயகர் சிலைகள் உற்பத்தி பற்றி விசாரிக்கையில் அவர் கூறியதாவது, ‘நாங்கள் விநாயகர் சதுர்த்திக்காக சிலைகளை தை முதலே செய்ய ஆரம்பித்துவிடுவோம். சிலைகளை செய்ய நாங்கள் ஆட்கள் வைப்பதில்லை. மகன், மகள், மருமகன் என குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
விநாயகர் சிலைகளை நாங்களே வடிவமைத்து நாங்களே விற்பனையும் செய்து வருகிறோம். சிலைகள் செய்வது எளிதல்ல கடை வாடகை, மின்சாரம், உணவு, பெயிண்ட், போக்குவரத்துக்கு என நிறைய செலவுகளும் வேலைகளும் உள்ளது.
கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலைகள் விற்பனை மந்தம் ஆனால், இந்த ஆண்டு சிலைகளின் விற்பனை தற்போது வரை அவ்வளவாக இல்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாகத்தான் உள்ளது. லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் வந்துவிடக் கூடாது. செலவு செய்த பணம் திரும்ப வந்தால் போதும் என்கின்ற அளவிற்கு விற்பனை உள்ளது.
எந்த தொழில் செய்தாலும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பார்கள், ஆனால் நாங்க பிள்ளையாரே செய்து விற்பனை செய்து வருகிறோம். ஆனால் லாபம் தான் இல்லை’ என வருத்தம் தெரிவிக்கிறார் விற்பனையாளர் ஆறுமுகம்.