விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(70). இவருக்கு முருகன்(38), சின்னதுரை(36) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சகோதரர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக சொத்து பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த முருகனிடம், சின்னதுரை மற்றும் பெற்றோர் சுப்பிரமணி, ராணி ஆகியோர் பிரச்னை செய்தனர். இந்த பிரச்னை கைகலப்பானதால், முருகனை, சின்னதுரை கத்தியால் குத்தினார். இதை கண்ட முருகனின் மனைவி தனலட்சுமி தடுக்க முயன்றபோது, அவரையும் சராமரியாக கத்தியால் குத்தினார். இதில் தனலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் சின்னதுரை, சுப்பிரமணி, ராணி ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போதே ராணி இறந்துவிட்டார்.
இதற்கிடையே அனைத்து தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சாந்தி இந்த வழக்கில் இன்று (நவம்பர் 19) தீர்ப்பு வழங்கினார். அதில், சின்னதுரை, சுப்பிரமணி ஆகியோருக்கு கொலை, கூட்டுச் சதி பிரிவுகளில் இரட்டை ஆயுள் தண்டனையும் தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.