இந்தியா முழுவதும் கடந்த 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடியைக் கடக்கும் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம், பண பரிவர்த்தனைக் கிடையாது என மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
சுங்கச்சாவடியைக் கடக்க ஃபாஸ்டேக் கட்டாயம்:
இதையடுத்து 75 விழுக்காடு வாகனங்கள் ஃபாஸ்டேக் திட்டத்திற்கு மாறினர். 25 விழுக்காடு வாகனங்கள் கட்டணம் செலுத்தி கடந்து வருகின்றன. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 12 வழிகளில் (சென்னை-திருச்சி) இருபுறமும் கட்டணம் செலுத்திச் செல்ல தலா ஒரு வழி மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, தலா 5 வழிகள் ஃபாஸ்டேக் வழியாக மாற்றப்பட்டு, சுங்கச்சாவடியைக் கடக்கின்றன.
இதனிடையே, ஃபாஸ்டேக் வாகனங்கள் செல்லும் வழியில் தவறுதலாக ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் வந்தால், கட்டணம் இருமடங்காக வசூல் செய்யப்படுகிறது. கரோனா காரணமாக 25 விழுக்காடு வாகனங்கள் ஃபாஸ்டேக்கிற்கு மாறமுடியாத காரணத்தால், மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் வரும் பிப்.14ஆம் தேதி வரை தளர்வு அளித்தது.
ஃபாஸ்டேக் இல்லையா? இரண்டு மடங்கு கட்டணம்:
இந்நிலையில், மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் வரும் 15ஆம் தேதி முதல் அனைத்து வழிகளிலும் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் என நேற்று (ஜன.13) அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஃபாஸ்டேக் இல்லாமல் வந்தால், இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் ரொக்கப் பணப் பரிவர்த்தனை செலுத்தி சுங்கச்சாவடியைக் கடக்க முடியாது என்றும் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:செல்லுபடியாகாத பாஸ்டேக் அட்டையுடன் வரும் வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம்!