விழுப்புரம்:கடந்த 2021ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பிற்கு சென்றிருந்தபோது, தமிழ்நாடு காவல் துறையில் சிறப்பு டிஜிபி ஆக பணியாற்றியவர், தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் எஸ்பி ஒருவர் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது. இதனையடுத்து, சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அரசு தரப்பு சாட்சியங்கள் ஆஜர்:இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் இருவர் மீதும் கடந்தாண்டு ஜூலை 29ஆம் தேதி விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்தது.
விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு மீதான விசாரணை நேற்று (ஆக. 18) விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பு சாட்சிகளாக உளுந்தூர்பேட்டை, பரனுர், செங்குறிச்சி ஆகிய சுங்கச்சாவடிகளில் பணியாற்றிய எட்டு பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
மீண்டும் சமர்பிக்க உத்தரவு: எட்டு பேரும் அளித்த சாட்சிகளை நீதிபதி புஷ்பராணி பதிவு செய்தார். அப்போது, சிபிசிஐடி நீதிமன்றத்தில் முன்னர் சமர்பிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் சிறப்பு டிஜிபி பேசிய தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், வாட்ஸ் அப் தகவல்கள் ஆகிய தொகுப்புகளை எடுத்து வர நீதிமன்ற ஊழியர்களுக்கு நீதிபதி ஆணையிட்டார். அச்சமயம் விசாரணை குறித்த தொகுப்புகளை காணவில்லை என நீதிமன்ற ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த நீதிபதி புஷ்பராணி, உடனடியாக அதனை தேடி எடுத்து வரும்படி அவர்களுக்கு ஆணையிட்டார். ஊழியர்கள் பல மணி நேரம் தேடியும் தொகுப்புகள் எதுவும் கிடைக்கப்பெறாததால் வழக்கு விசாரணையை வரும் ஆக. 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் (ஆக. 25) இதற்கு முன்னர் அளித்த சாட்சிய தொகுப்புகளின் நகலை நீதிமன்றத்தில் மீண்டும் சமர்ப்பிக்கும்படி சிபிசிஐடி போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
மேலும் நீதிமன்ற வளாகத்தில் வழக்கு தொடர்பான கோப்புகள் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற ஊழியர்களிடம் தனிப்பட்ட முறையில் நீதிபதி புஷ்பராணி விசாரணை மேற்கொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் காணாமல் போனது எப்படி என்பது தொடர்பான விசாரணை நடத்த வேண்டும் என்றும் தவறுக்கு துணை போனவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.
இதையும் படிங்க:பெண்ணை நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்... 5 பேர் கைது