விழுப்புரம்:பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளும் 'என் மண் என் மக்கள்' என்கிற நடைப்பயணம் விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி பகுதியில் நேற்று (டிச.18) மேற்கொண்டார். இதில் ஏராளமான பாஜகவின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி சுங்க வரி சாவடியில் தொடங்கி, விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வரை நடைப்பயணத்தை மேற்கொண்டார். பின்னர், திறந்த வேனில் நின்று பேசிய அண்ணாமலை, "9 ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் நெடுஞ்சாலை பணிகளுக்காக 4 ஆயிரத்து 800 கோடி கொடுத்துள்ளார். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 76 லட்சத்து 904 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் விவசாயிகள் பயன்படும் வகையில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 9 ஆண்டுகளில் 5 லட்சத்து 28 ஆயிரத்து 599 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். மக்கள் இதனைப் புள்ளி விவரங்களுடன் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் திமுகவினர் மக்களுக்கான எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செய்யாமல், அனைத்து இடங்களிலும் மஞ்சப்பைகளில் ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் உருவம் பொறிக்கப்பட்ட சித்திரங்களை எல்லா இடங்களிலும் விளம்பரப் படுத்துகின்றனர்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. விவசாயிகளின் நலன் கருதி அவர்களுக்குக் கால்நடைகள் வழங்கி, அவர்களுடைய வாழ்வாதாரம் மேம்பட நினைப்பவர் நம்முடைய நரேந்திர மோடி.
ஆனால், ஊழல் செய்து, ஏழை எளிய மக்களை வஞ்சிக்கிற ஆட்சியைத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் செய்து வருகிறது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது போன்று கொடுத்து, அதனை அவர்களுடைய கணவர்களால் டாஸ்மாக் கடைகள் மூலம் மீண்டும் வாங்கிக் கொள்கிறார், மு.க.ஸ்டாலின்.
திமுக அரசின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால், தீபாவளிக்கு முன், தீபாவளிக்குப் பின் என 467 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதே ஆகும். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே டாஸ்மாக் கடைகளைத் திறந்து, மாணவர்களின் வாழ்க்கையை இந்த திமுக அரசு அழித்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் பலர் கஞ்சா போதைக்கு அடிமையாகி அவர்களின் வாழ்கையையே இழந்து வருகின்றனர்" எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், "தமிழக மக்கள், மாணவர்கள், பெண்கள் ஆகியோரின் நலன் கருதி, பிரதமர் மோடியை மீண்டும் மூன்றாவது முறையாக, மத்தியில் ஆட்சி அமைக்க உதவும் வகையில், அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க:1989ல் காங்கிரஸ் - 2023ல் பாஜக! நாடாளுமன்றம் கண்ட இடைநீக்கம்! காங்கிரஸ் விவகாரத்தில் திரும்பியதா வரலாறு?