சாத்தான்குளம் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இவ்விவகாரத்தில் ஆளுங்கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கடும் வார்த்தைப் போர் நடைபெற்றுவருகிறது. நேற்று சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், இவ்விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதாகக் கூறி கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக விழுப்புரம் சட்டப்பேரவை உறுப்பினர் க. பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஜெயராஜும் பென்னிக்ஸும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இதயமற்று கூறும் அமைச்சர் சி.வி. சண்முகம், ஸ்டாலினை அரசியல் ஆதாயம் தேடுகிறார் என்று கூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உயர் நீதிமன்றம் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட காவலர்கள் கைதுசெய்யப்பட்டும், இது வழக்கமான லாக்அப் மரணம் போல அல்ல என்று மனசாட்சியில்லாமல் அவர் கூறுகிறார். இது அவருடைய கருத்து அல்ல; கலப்படமற்ற விஷம். உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும் வரை வாய் திறக்காமல், எங்கே போனார் இந்த சண்முகம்? ஸ்டாலினைக் குற்றஞ்சாட்டும் அமைச்சர், கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கூறியதை ஏன் மறைக்கிறார்? கொலையிலும் கண்துடைப்பு நாடகம் போடுவது கொடிய குற்றமல்லவா?