மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி நேற்று விழுப்புரத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் க.பொன்முடி தலைமையில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது
இதில், காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைச் சந்தித்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் பெற முடிவு செய்துள்ளோம். எங்களது கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருகை தரவுள்ளார்.
இந்த கையெழுத்து இயக்கமானது மத்திய அரசு, அவர்களுக்கு காவடி தூக்குகிற அதிமுக அரசு மற்றும் மாநிலங்களவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த பாமகவை எதிர்த்து நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதவி தொகை பெற 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் - பெண் ஊழியர் கைது