விழுப்புரம்மாவட்டம் பிடாகம் அருகே குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பண்டைய கால பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் உருவ அமைப்பு பார்ப்பதற்கு மற்ற பானை ஓடுகளை விட வித்தியாசமாக இருப்பதாக விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், எழுத்தாளருமான செங்குட்டுவன் கூறியுள்ளார்.
அதேநேரம், தென்பெண்ணை ஆற்றின் மேற்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள், கருப்பு மற்றும் சிவப்பு, கருப்பும் சிவப்பும் கலந்த 3 வகையில் உள்ளது. கருப்பு நிற பானை ஓடுகளின் மேல் பகுதிகளில் பள்ளவரி வடிவத்திலான அலங்கார கோடுகள் அமைந்திருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
மேலும், இவ்வகை பானை ஓடுகள் ஆற்றின் மேற்கு பகுதியில் இருந்து தண்ணீரின் போக்கில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியின் முடிவுகளில் தெரிய வந்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் மேற்பரப்பு பகுதியில் நடந்த இந்த ஆய்வில், மண்ணால் ஆன சுடுமண், தண்ணீர் குழாயின் ஒரு பகுதி, மேலும் மிகச் சிறிய மட்கலயம், மட்கலய மூடி, சுடுமண் கெண்டியின் மூக்குப் பகுதி, உடைந்த சுடுமண் கலயத்தின் விளிம்பு பகுதி போன்ற பல பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன.