கள்ளக்குறிச்சி: கடந்த 1999ஆம் ஆண்டு சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் சுரேஷ், பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தான்.
இச்சம்பவத்தை மறைக்கும் வகையில் பள்ளி தலைமையாசிரியை சிஸ்டர் பிரகாசி, பள்ளி ஊழியர்களான சின்னப்பன், மணிபாலன் ஆகியோரின் உதவியுடன் மாணவனின் சடலத்தைக்கொண்டு சென்று, சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வயல் வெளியில் வீசிவிட்டனர்.
அப்போது பள்ளி மாணவன் சுரேஷின் சடலத்தைக் கைப்பற்றிய ஆத்தூர் காவல் துறையினர் சந்தேகத்துக்குரிய மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனைத்தொடர்ந்து, காவல் துறையினர் முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி, பள்ளி மாணவன் சுரேஷின் தந்தை பாவாடை என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras Highcourt) வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பள்ளி மாணவன் உயிரிழந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு சிபிசிஐடி எஸ்பி-யாக இருந்த திருமதி.ராதிகா தலைமையிலான சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி, பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்தை மறைத்த தனியார் பள்ளி தலைமையாசிரியை சிஸ்டர் பிரகாசி, பள்ளி ஊழியர்கள் சின்னப்பன், மணிபாலன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
2 மணி நேரத்திற்கும் மேலாக சாட்சியம்
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளி ஊழியர்களான சின்னப்பன், மணிபாலன் ஆகியோர் உயிரிழந்துவிட்ட நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை சிஸ்டர் பிரகாசி மீதான வழக்கு விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த வழக்கில் விசாரணை அலுவலராக இருந்து, தற்போது டிஐஜியாக உள்ள திருமதி.ராதிகா நேரில் ஆஜராகி 2 மணி நேரத்திற்கும் மேலாக சாட்சியம் அளித்தார்.
அப்போது டிஐஜி திருமதி.ராதிகா அளித்த சாட்சியங்களை நீதிபதி திரு.கோபிநாதன் பதிவு செய்து கொண்டார்.
இதையும் படிங்க:Woman IPS officer sexual assault case: பெண் ஐபிஎஸ் அலுவலர் பாலியல் வழக்கு - நவ.20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு