விழுப்புரம்: Melmalayanur Angalamman Temple: செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் பிரிசித்திப் பெற்ற அம்மன் திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் மாதந்தோறும் அமாவாசை நாளன்று நள்ளிரவில் நடைபெறுகின்ற ஊஞ்சல் உற்சவத்தைக் காண தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் லட்சக்கணக்கில் மேல்மலையனூருக்கு வருவது வழக்கமான ஒன்றாகும்.
இந்நிலையில், உலகெங்கும் கரோனா நோய்த்தொற்று காரணமாக பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த 2019ஆம் ஆண்டு மார்ச் முதல் ஊஞ்சல் உற்சவம் நிறுத்தப்பட்டு இன்றுவரை, திருக்கோயில் வளாகத்திற்குள்ளேயே, பக்தர்கள் யாருமின்றி அறங்காவலர்கள் மட்டும் எளிய முறையில் ஊஞ்சல் உற்சவத்தை நடத்திவருகின்றனர்.
கடந்த 18 மாதங்களாக கோயிலினுள்ளே ஊஞ்சல் உற்சவத்திற்கு அனுமதிக்காமல், இருப்பதாக பக்தர்களிடையே புகார்கள் எழுந்துள்ளன. அவ்வப்போது பக்தர்களும் அதைக் காண கோயிலுக்கு வந்து திரும்பிச் செல்லுகின்றனர்.
கரோனா கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கக் கோரிக்கை
இந்தாண்டு மார்கழி மாத அமாவாசையையொட்டி, பக்தர்கள் கூட்டம் நேற்று புத்தாண்டை ஒட்டிய விடுமுறை என்பதால் கூடுதலாக ஏராளமான பக்தர்கள் அம்மனைத் தரிசனம் செய்ய குவிந்திருந்தனர்.
நேற்றிரவு மார்கழி மாத அமாவாசை என்பதால் மேல்மலையனூர் அம்மனுக்கு 'ஊஞ்சல் உற்சவம்' கோயில் வளாகத்திற்குள்ளேயே நடத்தப்பட்டது. இதில் கோயிலின் பூசாரிகள் மட்டுமே கலந்துகொண்டனர். அதைக் காண வந்த பக்தர்கள், இந்தாண்டும் அனுமதி மறுக்கப்பட்டதால் வெளியே நின்று அம்மனை வழிபட்டனர்.
மேலும், திருக்கோயிலில் கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி வருகைதரும் பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி முகக் கவசம், கிருமிநாசினி, உடல் வெப்பநிலை பரிசோதனைகள் செய்து கோயிலுக்குள்ளே அனுப்ப வேண்டும் எனச் சமூக செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
இந்து சமய அறநிலையத் துறைக்கு பக்தர்கள் வேண்டுகோள்
இதற்கிடையே, பக்தர்கள் கூட்டம் அதிகமானதால் வெளியிலிருந்து பக்தர்கள், சாமியைப் பார்ப்பதற்காகக் கோயில் மண்டபங்கள் மேலேயும் சுற்றுச்சுவர் மேலே ஏறியும் சாமியைப் பார்க்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. எனவே, இனிவரும் அமாவாசை நாள்களில் கோயிலுக்கு வெளிப்பகுதிகளில் எல்இடி ஸ்கிரீன் அமைத்து கோயிலுனுள்ளே நடக்கக்கூடிய ஊஞ்சல் உற்சவத்தை ஒளிபரப்பு செய்தால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் என்று கோரிக்கை வைக்கவேண்டுமென இந்து சமய அறநிலையத் துறைக்கு கோரிக்கைவைத்துள்ளனர்.
குறிப்பாக, கோயில் வளாகத்திற்குள் இருக்கக்கூடிய பூசாரிகள் முகக் கவசம் அணிய வேண்டும் என்பதும் அலுவலர்கள் வந்தால் மட்டுமே முகக் கவசம் அணிந்து இருப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், கோயிலுக்குள் பூசாரிகள் பக்தர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாகப் பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, திருக்கோயில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறையும் இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுத்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு பக்தர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் இதையும் படிங்க:'பொங்கல் பண்டிகைக்கு 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும்' - அமைச்சர் ராஜ கண்ணப்பன்