விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா தெளரவி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி பழனி (48). இவரது மகன் தமிழ்வேந்தன் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்:
இவர் நேற்று (டிச.19) தெளரவி கிராமத்தின் அருகேவுள்ள வராக நதியில் நண்பருடன் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது, ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் எதிர்பாராதவிதமாக தமிழ்வேந்தன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நேற்று (டிச.18) முழுவதும் சிறுவனின் உடலை தேடி வந்தனர். பின்னர், இரவு நேரம் என்பதால் அங்கிருந்து சென்ற தீயணைப்புத் துறையினர், இன்று (டிச.19) மீண்டும் சிறுவனின் உடலை தேடி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்:
இதுவரை சிறுவனின் உடல் மீட்கப்படாததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் புதுவை- திருக்கனூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர், விழுப்புரம் கோட்டாட்சியர் கிராம மக்களை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உடனடியாக பேரிடர் மீட்புக் குழுவினர், மீட்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கிராம மக்களின் கோரிக்கையை அவர் ஏற்றதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆர்ப்பாட்டம் செய்த கிராம மக்கள் மேலும், சிறுவனின் பெற்றோர், கிராம மக்கள் ஆகியோர் தற்போது சிறுவனின் உடலை எதிர்பார்த்து ஆற்றங்கரையோரம் சோகத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: அரசு கட்டடத்திற்காகத் தோண்டப்பட்ட குழி: தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு