தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எக்கியார்குப்பம் விஷச்சாராய உயிரிழப்பு 14ஆக உயர்வு - Villupuram news

விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் விஷச்சாராயம் அருந்தியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

எக்கியார்குப்பம் விஷச்சாராயம் உயிரிழப்பு எண்ணிக்கை 14ஆக உயர்வு
எக்கியார்குப்பம் விஷச்சாராயம் உயிரிழப்பு எண்ணிக்கை 14ஆக உயர்வு

By

Published : May 20, 2023, 1:46 PM IST

விழுப்புரம்:மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 14ஆக உயர்ந்துள்ளது. மேலும், சுமார் 80 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் புதுச்சேரி மாநிலம் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 14 நபர்கள், தற்போது வரை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர். மேலும், தற்போது வரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 48 நபர்கள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று நபர்கள் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பலருக்கு கண் பாதிப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு ஆகிய உடல் நலக் கோளாறுகளும் உள்ளது. முன்னதாக விஷச்சாராயம் விற்பனை செய்த அமரன், முத்து, ஆறுமுகம் மற்றும் ரவி உள்ளிட்ட 9 நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்ததில் பலரும் உயிரிழந்து பாதிக்கப்பட்ட இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று தங்களது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து வந்தனர்.

அதேநேரம், தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் உள்ளிட்டவற்றை அடியோடு ஒழிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்நாடு காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இந்த கள்ளச்சாராயம் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதலில் காவல் துறையினர் விசாரணை செய்து வந்த இந்த வழக்கானது, தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்த உத்தரவின் பேரில், சிபிசிஐடி காவல் துறையினரிடம் மாற்றப்பட்டது. இதனையடுத்து இதன் விசாரணை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த அதிரடி நடவடிக்கையில் பல லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, அவை அந்த இடத்திலேயே அழிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், இந்த விவகாரம் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், தகுந்த நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:Illicit liquor deaths: விஷச்சாராய பலி விவகாரம் - விசாரணையைத் தொடங்கியது சிபிசிஐடி!

ABOUT THE AUTHOR

...view details