சென்னை: மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் அதிமுக தொடங்கப்பட்டு, இன்றுடன் 50 ஆண்டுகள் தொடங்கியது. இதன் காரணமாக இன்று (அக்.17) மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் பொன்விழா கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இன்று சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்குச் சென்றார்.
பின்னர் அங்கு அதிமுக கொடியை ஏற்றி, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிவி சண்முகம் பேசுவது தொடர்பான காணொலி ஆயிரம் சசிகலா வந்தாலும்...
அத்துடன் கல்வெட்டு ஒன்றையும் திறந்துவைத்தார். அந்த கல்வெட்டில் "அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா" எனப் பொறிக்கப்பட்டிருந்தது.
இது அதிமுக வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலாவின் இந்தச் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக பொன்விழாவைக் கொண்டாடினார்.
விழாவுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பண்ருட்டி ராமச்சந்திரன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட பெரிய தலைவர்களை பார்த்த இயக்கம் அதிமுக. அவர்களே, இப்போது எங்கு இருக்கிறார்கள் என இருந்த இடம் தெரியாமல் சென்று விட்டனர்.
நிஜமாக இருந்தவர்களாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை. நீங்கள் (சசிகலா) நிழல். உங்களால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு சசிகலா அல்ல ஆயிரம் சசிகலா வந்தாலும், என்ன நாடகம் நடத்தினாலும் அதிமுகவை ஒன்றும் அசைக்க முடியாது' என்றார்.
இதையும் படிங்க:அதிமுக பொன்விழா - எம்ஜிஆர் கடந்து வந்த பாதை