உதயநிதியின் சனாதன கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவி சண்முகம் விழுப்புரம்:கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, "சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்" என கருத்து தெரிவித்தார். இதன் மூலம் இந்து மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு உதயநிதி அழைப்பு விடுப்பதாக பாஜக தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டு தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
அதுமட்டுமின்றி, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும் அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து டெல்லி, பிகார் மாநிலங்களில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில் அயோத்தி சாமியார் ஒருவர் அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அமைச்சர் உதயநிதி குறித்து பெரும் சர்ச்சைக்குள்ளான சாமியாரின் அந்தப் பதிவு இணையத்தில் கடந்த ஒரு வாரமாக பேசு பொருளாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து சாமியாரின் சர்ச்சை வீடியோவிற்கு, "என் தலையை சீவுவதற்கு எதற்கு 10 கோடி 10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும் என அவருடைய தாத்தா முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பாணியில் நகைச்சுவையாக பதிலளித்தார் அமைச்சர் உதயநிதி. மேலும் சனாதனம் ஒழியும் வரை என் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றும், சனாதனம் என்ற ஒற்றை வார்த்தை நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், தான் தெரிவித்த கருத்தில் இருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் அதே கருத்தில் உறுதியுடன் நிற்பேன்" என உதயநிதி ஒவ்வொரு மேடைகளில் பேசி வருகிறார்.
இந்த நிலையில், தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி, "சனாதனம் குறித்து அம்பேத்கர், பெரியார் சொன்னதைத் தான் நானும் சொன்னேன். அனைத்து மதத்தினரும் அர்ச்சகராகலாம் என்கிற அந்த ஒரு அரசாணையை கொண்டு வந்தது நம்முடைய திராவிட முன்னேற்ற கழகம்.
மத்தியில் ஆளும் அமைச்சர்களான அமித் ஷா முதல் ஜே.பி நட்டா வரை நான் பேசியதை தவறாக திரித்து பொய் செய்தியாக மக்களிடம் கூறி வருகிறார்கள்" எனக் கூறியிருந்தார். இதனை கண்டிக்கும் வகையிலும், சனாதனம் குறித்து திமுக பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காட்டமாக தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் இன்று அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம்.
அப்போது அவர் பேசியதாவது, "சனாதன தர்மத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் இன்றைக்கு சொல்லிக் கொண்டிருக்கின்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எப்படி இந்த பதவிக்கு வந்தார்? சனாதன தர்மத்தில் சொல்லப்படுகின்ற ஒன்று குலத்தொழில்.
இன்று திமுகவை குலத்தொழிலாக கலைஞர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், அவரைத் தொடர்ந்து அவரது மகன் உதயநிதி என்ற வழியிலே கட்சியை குலத்தொழிலாக நடத்தி பதவிக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு இதைப் பற்றி பேச எந்த அருகதையும் தகுதியும் கிடையாது. திமுகவே ஒரு டெங்கு தான் திமுக ஒழிந்தால் தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து மக்களிடம் பொய்யான கருத்துக்களை பேசி வருகின்றார்" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இதனை எதிர்க்கும் வகையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பெயரில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே அவருடைய தலைமையில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கு ஆட்சியை கண்டித்து நாளை மாபெரும் அளவில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும் உதயநிதி ஸ்டாலின் விவகாரம் தொடர்பாக நாளைய தினம் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் இது குறித்து காட்டமாக மேடையில் விமர்சனங்களை முன்வைப்பார் என அரசியல் வட்டாரங்களில் அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:மேகதாது அணைக்கு அனுமதி தொடர்பாக கர்நாடக முதலமைச்சரின் பேச்சு ஆபத்தானது- ராமதாஸ் அறிக்கை!