விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெ.செல்வத்திற்கு ஆதரவாக அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (மார்ச்.13) பரப்புரை செய்தார்.
அப்போது மக்களிடையே பேசிய அவர், "நாங்கள் விழுந்தாலும் எங்கள் இனம் எழுந்தால் போதும் என்பதே எங்கள் கொள்கை முடிவு. இந்தியாவிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட ஒரே அரசியல் இயக்கம் நாம் தமிழர் கட்சி தான். தற்போது பணிச் சுமையின் காரணத்தால் மன உளைச்சலுக்குள்ளாகி காவலர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
நாம் தமிழர் ஆட்சியில் ஆண் காவலர்களுக்கு எட்டு மணிநேரமும், பெண் காவலர்களுக்கு ஆறு மணி நேரமும் மட்டுமே பணி வழங்கப்படும். சுழற்சி முறையில் காவலர்களுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை அளிக்கப்படும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுற்றுலா செல்லவும் வழிவகை செய்யப்படும். குற்றங்கள் நடந்து முடிந்த பிறகு விசாரணை நடத்தும் சூழலை முற்றிலும் மாற்றி, குற்றங்கள் நடப்பதற்கு முன்னரே தடுக்கும் வகையில் குற்றத்தடுப்புப் படை உருவாக்கப்படும். உயிரை இழப்பது தனிமனித இழப்பாகும்; உரிமையை இழப்பது என்பது இனத்தின் இழப்பாகும்" என்றார்.
இதையும் படிங்க:1996 தேர்தல்! - மொடக்குறிச்சியால் விழி பிதுங்கிய தேர்தல் ஆணையம்!