கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அரைமணி நேரத்தில் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது தொடர்பான சிறப்பு குழு கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, "விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 505 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 379 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை இந்த தொற்று பாதிக்கப்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 106 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1,200 முதல் 1,300 பேர்வரை கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனர். கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
கரோனா பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக வட்டார அளவில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.