தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோமாளிகளே 'இல்லம் தேடி கல்வி' திட்டம்தான் திராவிடம் - ஸ்டாலின் அதிரடி - ஸ்டாலின்

திராவிடம் என்றால் என்ன என்று சில கோமாளிகள் பேசிவருகிறார்கள், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள்தான் திராவிடம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

STALIN ABOUT DRAVIDAM
STALIN ABOUT DRAVIDAM

By

Published : Oct 27, 2021, 7:56 PM IST

Updated : Oct 27, 2021, 10:01 PM IST

விழுப்புரம்: கரோனா கட்டுப்பாடு காரணமாக பள்ளிகள் இயங்காததால், பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு கற்றல் இடைவெளியும் ஏற்பட்டுள்ளது. இதனை, சரிசெய்ய பள்ளிக்கல்வித் துறையால் 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தன்னார்வலர்களை கொண்டு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாலை ஒரு மணிநேரம் சிறப்பு வகுப்பு நடைபெறும்.

தன்னார்வலர்களின் கல்வித்தகுதி என்ன?

மேலும், இத்திட்டம் மாணவ, மாணவியர்களின் வசிப்பிடம் அருகே சென்று தன்னார்வலர்களின் பங்கேற்புடன் கற்றல் வாய்ப்பை வழங்கவும் வழிவகை செய்கிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க தன்னார்வலர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

அதேபோல், ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதுதான் திராவிடம்

'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் அடிப்படையில், நடப்பு கல்வியாண்டில் ஆறு மாத காலத்திற்கு, வாரத்திற்கு ஆறு மணிநேரம் தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களை அன்றாட கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் பங்கேற்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல கலைக் குழுவினர் உதவியுடன் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து உரையாற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார் குப்பத்தில் இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 27) மாலை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "திராவிடம் என்றால் என்ன என்று சில கோமாளிகள் பேசிவருகிறார்கள், இதுபோன்ற திட்டங்கள் தான் திராவிடம். நூற்றாண்டு காலமாக மறுக்கப்பட்ட கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மூலம் கொண்டு சேர்த்தது திராவிட இயக்கம்.

மாநில சுயாட்சி, மத நல்லிணக்கம் போன்ற பல செயல்களை செய்துவரும் நிலையில்தான், 'இல்லம் தேடி கல்வி' போன்ற திட்டங்களையும் கொண்டு வருகிறோம். ஒரு காலத்தில் இன்னார்தான் படிக்க வேண்டும், இன்னார் படிக்கக்கூடாது என்ற நிலையை மாற்றிய இயக்கம் திமுக.

மாணவர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஏழை, எளிய விளிம்புநிலை மக்கள், பட்டியல் இன பழங்குடி இன மக்கள் ஆகியோருக்கு பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இது ஒரு கட்சியின் ஆட்சியல்ல, இனத்தின் ஆட்சி. மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி என்கிற மகத்தான தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிற இயக்கம்தான் திமுக" என்றார்.

இதையும் படிங்க: இன்னார்தான் படிக்க வேண்டும் என்பதை மாற்றியது திமுக - ஸ்டாலின்

Last Updated : Oct 27, 2021, 10:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details