விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பூங்காவுடன் கூடிய குளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இதையடுத்து, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணி உள்ளிட்ட ஒன்பது பணிகளுக்கு 1,745.152 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார்.
அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "பல ஆண்டு காலமாக மக்கள் வைத்த கோரிக்கையான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மரக்காணம் துறைமுகம் அமைப்பதற்கான திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினைகள் உள்ள இடங்களில் அரசு முக்கியக் கவனம் செலுத்திவருகிறது.
ஏரி, குளம், குட்டைகள் உழவர்கள் பங்களிப்போடு குடிமராமத்துப் பணிகள் நிறைவேற்றப்பட்டுவருவதால் வேளாண் பெருங்குடி மக்கள் பயன் பெற்றுவருகிறார்கள். மக்கள் நன்மை அடைகின்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுமென்றே தமிழ்நாடு அரசு மீது குறைகூறிவருகிறார். எதைச் சொல்கிறமோ அதையே செய்கிறோம். செய்வதை மட்டுமே சொல்கிறோம்" என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "விழுப்புரத்தில் நகர மையப்பகுதியில் குப்பை மேடாக இருந்த பகுதி தற்போது அழகான பூங்காவாக மாற்றப்பட்டிருக்கிறது. பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவில் மக்கள் அமர்ந்தாலே மனக்குறைகள் நீங்கும் அளவிற்கு மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.