விழுப்புரம்: மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மறுநாளான 19ஆம் தேதி மயானக் கொள்ளை விழாவும், 23ஆம் தேதி தீ மிதி விழாவும் நடைபெற்றது. அங்காளம்மன் கோயிலின் 7ஆம் நாள் விழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தினை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு, கோயிலின் வடக்கு வாயிலில் இருந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்தவர்களும், பிற மாநிலத்தவர்களும் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தினை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.