விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைப்பதற்கான திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா, அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தருக என நாடாளுமன்றத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் முன்னதாகக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் தற்போது மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எழுத்துப்பூர்வமான பதில் அளித்துள்ளார்.
’எதிர் காலத்தில் உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் வரும்’ - மத்திய அரசு - Union Minister of Civil Aviation Hardeep Singh Puri
உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைக்க திட்டம் உள்ளதாகவும், ஆனால் எந்த நிறுவனமும் விமான நிலையம் அமைக்க விண்ணப்பிக்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்தை வழங்குவதற்கு ஆர்சிஎஸ் - உடான் திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. விமான நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தடத்தில் இருக்கும் பயணிகளின் தேவையை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் லைசென்ஸ் கோருவார்கள். உடான் ஆவணங்களில் உளுந்தூர்பேட்டை விமான நிலையம் இடம்பெற்றுள்ளது. ஆனால் இதுவரை எந்த விமான நிறுவனமும் அங்கு விமானநிலையம் அமைக்குமாறு விண்ணப்பிக்கவில்லை. எதிர்காலத்தில் அவ்வாறு விண்ணப்பம் வந்தால் அரசு அதற்கு அனுமதி அளிக்கும்”எனக் கூறியுள்ளார்.