விழுப்புரம்: விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் அரசின் உரிய அனுமதி இன்றி அன்புஜோதி என்ற பெயரில் ஆசிரமம் இயங்கி வந்தது. இந்த ஆசிரமத்தை கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆழக்கூடா பகுதியை சேர்ந்த 45 வயது நபர் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் நடத்தி வந்துள்ளார். இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்களை அடைத்து வைத்து இரும்புச் சங்கிலியால் கட்டிப்போட்டு அடித்து சித்ரவதை செய்தது தொடர்பாகவும், அங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாகவும் எழுந்த புகாரின்பேரில் ஆசிரம நிர்வாகி கைது செய்யப்பட்டார். அதன்பின் அவரது மனைவி உள்பட 9 பேரை கெடார் போலீசார் கைது செய்தனர்.
அங்கிருந்த 143 பேர் மீட்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பல்வேறு ஆசிரமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆசிரமத்தில் இருந்து மாயமான 11 பேரின் கதி என்ன என்பது பற்றி தெரியவில்லை. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆசிரம வழக்கை, சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
அதன்படி ஆசிரமம் சம்பவம் தொடர்பாக கெடார் போலீஸ் நிலையத்தில் இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள், வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள் அனைத்தும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோவிந்தராஜ், தேவராஜ் ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நேற்று மாலையே சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர். இவ்வழக்கை விசாரிப்பதற்காக விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட சிபிசிஐடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர்கள் விழுப்புரம் ரேவதி, சேலம் குமார், கார்த்திகேயன், திருவண்ணாமலை தனலட்சுமி ஆகியோர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கெடார் போலீசார் ஒப்படைத்த வழக்கின் முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் விசாரணை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் இன்று காலையில் காப்பகத்தில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர். சிபிசிஐடி எஸ்பி அருண் பாலகோபாலன், ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான குழுவினர் காலை 10.30 மணி முதல் 3 மணிநேரம் ஆய்வு செய்தனர்.