விழுப்புரம்வல்லம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பந்தூர் ஊராட்சியில் மொடையூர், கம்பந்தூர், துடுப்பாக்கம், தையூர் போன்றப் பகுதிகளை இணைக்கும் சாலையில் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக 600 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் டேங்க் மின்மோட்டாருடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த டேங்கில் இருந்துதான் மொடையூர் பகுதியைச்சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கம்பந்தூர் குடிநீர் டேங்கில் இருந்து, குடிநீர் எடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலையில் மக்கள் குடிநீர் எடுத்துச்செல்ல வந்தபோது தண்ணீரில் விவசாயத்திற்காகப் பயன்படுத்தும் பூச்சுக்கொல்லி மருந்து நாற்றம் அடிப்பதாக சந்தேகமடைந்தனர்.
பொதுமக்களைக் கொல்ல சதி:இதனால், மக்கள் நீரைக் குடிக்காமல், காவல் துறையினருக்கும், வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த நீரினை மக்கள் கீழே கொட்டி டேங்கை அப்புறப்படுத்தினர். சமூக விரோதிகள் சாதிப்பாகுபாட்டை காரணம்காட்டி, விஷம் வைத்து, பொதுமக்களை கொல்ல சதி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக செஞ்சி காவல் நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் காமாட்சி புகார் கொடுத்துள்ளார். செஞ்சி காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மொடையூர், துடுப்பாக்கம், கம்பந்தூர் போன்ற பகுதி கிராம மக்கள் இதில் தொடர்புடைய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.