தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்துக்காக பெற்றோர் கொலை  - மகனுக்கு தூக்குத் தண்டனை - விழுப்புரம் கொலை வழக்கு

திண்டிவனத்தில் சொத்துக்காக சொந்த குடும்பத்தைக் கொலை செய்த வழக்கில், தம்பதிக்கு தூக்குத் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தம்பதிக்குத் தூக்குத் தண்டனை
தம்பதிக்குத் தூக்குத் தண்டனை

By

Published : Oct 26, 2021, 6:46 PM IST

Updated : Oct 26, 2021, 8:12 PM IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த கோவர்த்தனன் என்பவர் 2019ஆம் ஆண்டு சொத்துக்காக தனது பெற்றோர், தம்பியை பெட்ரோல் குண்டுவீசி கொலை செய்துள்ளார். இதில் கோவர்த்தனனின் தந்தை ராஜி, தாய் கலைச்செல்வி, தம்பி கவுதம் ஆகியோர் உயிரிழந்தனர்.

ஏ.சி வெடித்ததன் காரணமாக இவர்கள் உயிரிழந்துவிட்டதாக கோவர்த்தனன் குடும்பத்தினர் முன் நாடகமாடியுள்ளார். இந்த வழக்கில் கோவர்த்தனன், அவரது மனைவி தீப காயத்ரி ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கின் தீர்ப்பை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று (அக்.26) வழங்கியது.

கோவர்த்தனன் - தீப காயத்ரி

வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், தம்பதிக்கு தலா நான்கு தூக்குத் தண்டனையுடன், தலா இரட்டை ஆயுள் தண்டனையும், தலா மூன்று லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி என்ன...

திண்டிவனம் அடுத்த காவேரிபாக்கத்தில் வசித்த ராஜி என்பவர் தனது மனைவி கலைச்செல்வி, இளைய மகன் கவுதமனுடன் ஏசி பொருத்தப்பட்ட அறையில் உறங்கியுள்ளனர். அப்போது ஏற்பட்ட ஏசியில் தீ விபத்தில் மூன்று பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி நிகழ்ந்துள்ளது.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மூன்று பேரின் உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறையினருக்கு சந்தேகம்

ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தே உயிரிழப்புக்குக் காரணம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் ராஜியின் உடலிலிருந்து வழிந்த ரத்தம் காவல் துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

தீ விபத்தில் எப்படி ரத்தம் வழிந்தது என்ற கேள்வி எழுந்தது. மேலும் அறைக்கு அருகில் காலி பெட்ரோல் கேன் இருந்ததால், இது திட்டமிட்டுச் செய்த கொலையாக இருக்குமோ என்று சந்தேகத்தைத் தீவிரப்படுத்தியது.

இதனையடுத்து காவல் துறையினருக்கு மூத்த மகனான கோவர்த்தனன் மீது சந்தேகம் எழுந்தது. அவரை விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மனைவியுடன் சேர்ந்து தனது குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கொலை செய்தது எப்படி

உயிரிழந்த தந்தை ராஜிக்கு அதிக சொத்துகள் இருந்ததாகவும், முத்த மகனை விட இரண்டாவது மகனான கவுதம் மீது அதிக பாசமும், அக்கறையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் மூன்று பேரையும் ஒரேஅறையில் வைத்து, கோவர்த்தனன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

மேலும் அவர்கள் தீப்பற்றி எரிந்தபோது காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டனர். அப்போது சத்தம் கேட்க கூடாது என கோவர்த்தனன் தீயை அணைத்துவிட்டு, மூவரையும் வெட்டி கொலைச் செய்துள்ளார். இதற்கு அவரது மனைவி தீப காயத்ரியும் உடந்தையாக இருந்ததாக அவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், தலா 4 தூக்கு தண்டனை, தலா 2 ஆயுள் தண்டனை, தலா ரூ.3 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதையும் படிங்க:ஏசி மின்கசிவு வழக்கில் திருப்பம்; சொத்துக்கு ஆசைப்பட்டு மூத்த மகனே கொலை செய்தது அம்பலம்!

Last Updated : Oct 26, 2021, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details