விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மூத்த மகள் ஜெயஶ்ரீ. இவர் கடந்த மே 11ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த நபர்களால் பெட்ரோல் ஊற்றி, எரித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இறந்துபோன ஜெயஶ்ரீயின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அதே ஊரைச் சேர்ந்த கலியபெருமாள், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (மே 14) சிறுமதுரை கிராமத்துக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கினார். இதேபோல் கடந்த மே 13ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் சிறுமியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில், அளவுக்கு அதிகமான கூட்டத்தைக் கூட்டியதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் மீது திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்செயல் தேமுதிக, பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திடீரென மயக்கமடைந்து இறந்தவருக்கு கரோனா