விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது இரண்டு நாட்களுக்கும் மேலாகநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவுக்கிணங்க நடைபெற்று வரும் இந்த வேட்டையில் முன்னாள் கஞ்சா வியாபாரிகள் 200-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஆரோவில் பகுதியில் டிஎஸ்பி விக்ரம் மேற்பார்வையில், ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதில், கஞ்சா எண்ணெய் மற்றும் ஊசி ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதன் மூலம் உடலில் ஊசி செலுத்தப்பட்டு போதை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்ட கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த போவாஸ் (24) மற்றும் சென்னை ஆவடியை சேர்ந்த ஷெரின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் இருந்து 30 ml அளவு கொண்ட கஞ்சா எண்ணெய் மற்றும் 3 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்கள் இருவரையும் நீதிமன்றம் முன் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரூ.2 கோடி ஏல சீட்டு மோசடி: 7 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய தம்பதி.!