விழுப்புரம்: மேற்கு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட G.R.P தெருவைச் சேர்ந்த ஞானசேகர் என்பவர் எம்.ஜி.ரோட்டில் பழக்கடை நடத்தி வருகிறார். அவருக்கு சாந்தி என்ற மனைவியும், ராஜசேகர் (33) சுமை தூக்கும் தொழிலாளி, வல்லரசு (24) ஓட்டுநர் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஞானசேகருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அதனால் பழக்கடையில் வரும் பணத்தை குடும்பத்திற்கு தருவதில்லை என்றும் சாந்தி தனது மகன்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் இருவரும் மது அருந்திவிட்டு தந்தையிடம் இதைப் பற்றி கேட்க பழக்கடைக்கு சென்றுள்ளனர். அப்போது பழக்கடையில் தந்தை இல்லாததால் அங்கு உள்ளவர்களிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. மேலும் கடைவீதியில் உள்ள பிற கடைகளிலும் பிரச்சனை செய்துள்ளனர். அவர்கள் தாக்கியதில் தீபக், புண்ணியகோடி என இருவர் காயமடைந்தனர்.
பின்னர் வேறு ஒரு கடையில் இருந்தவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர். இதை அங்கிருந்த இப்ராஹிம் (45) என்பவர் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த சகோதரர்கள் வல்லரசு மற்றும் ராஜசேகர் இருவரும் இப்ராஹிமை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் இப்ராஹிமை குத்தியதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்த இப்ராஹிமை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல முயன்ற போது அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற சகோதரர்கள் வல்லரசு, ராஜசேகர் இருவரையும் அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து வைத்து, இதுகுறித்து காவல்துறைக்கு தெரிவித்தனர்.