தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இன்னும் கும்மிடிப்பூண்டியை கூட ஸ்டாலின் தாண்டவில்லை''; CM-ன் தேசிய அரசியல் குறித்து அண்ணாமலை விமர்சனம்! - Villupuram

கும்மிடிப்பூண்டியை கூட தாண்டாமல் தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதை ஏற்க முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

‘இன்னும் கும்மிடிப்பூண்டியை கூட தாண்டவில்லை..’ - அண்ணாமலை பகிரங்க விமர்சனம்!
‘இன்னும் கும்மிடிப்பூண்டியை கூட தாண்டவில்லை..’ - அண்ணாமலை பகிரங்க விமர்சனம்!

By

Published : Mar 2, 2023, 10:48 PM IST

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

விழுப்புரம்:தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று (மார்ச் 2) விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அண்ணாமலை, “விழுப்புரம் மாவட்டத்தில் பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது. உள்கட்டமைப்பினை வைத்து அரசியல் இங்கு பேசப்படவில்லை. சாதியை வைத்துதான் அரசியல் செய்யப்படுகிறது. திரிபுராவில் 2 சதவீதமாக பாஜக இருந்தது. தற்போது கட்சி வளர்ச்சியடைந்து, இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.

தனிப்பெரும்பான்மையாக திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. நாகாலாந்தில் இரண்டு பங்கு பாஜகவிற்கு இடம் கிடைத்துள்ளது. மேகாலயாவில் பாஜக கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடிதான் காரணம். வடகிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடி ஆட்சி செய்வதை ‘அஷ்டலட்சுமி’ என்று கூறுகின்றனர். வடகிழக்கு முழுவதும் பாஜக கட்சி அல்லது பாஜக கூட்டணி கட்சி வெற்றி பெறுகிறது.

ஈரோடு தேர்தலில் மக்கள் ஒரு தீர்ப்பினை கொடுத்துள்ளனர். காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு தேர்தலில் மக்கள் தீர்ப்பினை ஏற்கிறேன். 2024ஆம் ஆண்டில் தேர்தல் பாஜகவிற்கானதாக இருக்கும். ஈரோடு தேர்தல் முடிவை தலைவணங்கி ஏற்கிறேன்.

இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியைச் சார்ந்துதான் இருந்திருக்கிறது. அதற்காக திமுக ஸ்டாலினின் 24 மாத காலம் இருந்ததற்காக மக்கள் வாக்களித்தார்கள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டோம். 2024 வரை இடைத்தேர்தல் நடக்கக் கூடாது என வேண்டிக்கொள்கிறேன். திமுகவில் இருந்து வெளிவர திருமாவளவன் புதிய யுக்தியை கையாளுகிறார்.

திமுக கூட்டணியில் இருந்து வெளி வர வேண்டுமென்றால், தைரியமாக வரலாம். சாக்கு போக்கு ஏன் திருமாவளவன் கூறுகிறார் என்று தெரியவில்லை. பாஜக கட்சி மற்றும் அண்ணாமலையை மட்டுமே பேசுவதற்கு திருமாவளவன் கூட்டம் போடுகிறார். காஷ்மீரில் மட்டும் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1,200 தீவிரவாதிகள் சுடப்பட்டுள்ளனர்.

மோடி தலைமையிலான அரசு, சொல்லாமலேயே பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்துள்ளது. ஆனால், மாநில அரசுகள் வாக்குறுதி கொடுத்தும் குறைக்கவில்லை. கேஸ், பெட்ரோல், டீசல் போன்றவைகள் ரஷ்யாவில் இருந்து வாங்கப்படுவதால்தான் விலையேற்றம் ஏற்படுகிறது.

கூட்டணி நட்பு என்பது ஒரு சித்தாந்தத்தோடு இருப்பதால், பாஜக அதன் கூட்டணி கட்சியான அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரித்து வாக்கு சேகரித்தது. எங்களின் கூட்டணி பலமாகத்தான் உள்ளது. கருத்தியல் குறித்து விவாதிக்கத் தயாரா என கேட்கும் திருமாவளவன், தடா பெரியசாமியிடம் கருத்தியல் தொடர்பாக விவாதிக்க தயாரா?

சாதிய அமைப்புகளைக் கொண்ட கட்சியாக விசிக உள்ளது. தமிழ்நாட்டில் நடக்கும் பாதி கலவரங்களுக்கு திருமாவளவன்தான் காரணம். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைவது என்பது அவர்களது கட்சி சார்ந்த முடிவு. அதில் நாங்கள் தலையிட முடியாது. கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு அமைச்சர்கள் சிறையில் உள்ளதால், தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது.

தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறும் ஸ்டாலின், கும்மிடிப்பூண்டியை தாண்டாமல் தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. ஃபரூக் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் போன்றவர்கள் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வருவது தேசிய அரசியல் இல்லை. பல்வேறு மாநிலங்களில் போட்டியிட்டு தேசிய அரசியல் பற்றி பேசுவதுதான் தேசிய அரசியல்.

விலைபோகாத கத்திரிக்காயைக் கொண்டு வந்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதை திமுக செய்கிறது. கர்நாடகாவில் திமுக போட்டியிட்டு தேசிய அரசியலுக்கு வந்துவிட்டு, அதன் பிறகு ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வந்து விட்டதாக கூறினால் ஏற்போம்” என்றார்.

இதையும் படிங்க:திமுகவுக்கு திருமாவளவன் எச்சரிக்கை விடுக்கிறாரா?

ABOUT THE AUTHOR

...view details