விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பொம்பூர் கிராமத்தில் அங்காளம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை இரவு சாமி வீதிஉலா கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஊர் எல்லையில் சிலர் பட்டாசு வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இருத்தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சிலர் சாமி ஊர்வலத்தில் கல்வீசியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இருதரப்பினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் 8 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் கலவரத்தைக் கட்டுப்படுத்தி காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வன்முறையின் போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அருகிலுள்ள 2 ஏக்கர் கரும்பு தோட்டத்திற்குத் தீ வைத்தனர்.