விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, சுமார் 200 மீட்டர் தொலைவில் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகன விற்பனை நிலையம் அமைந்துள்ளது.
இந்த ஷோரூமிற்கு கடந்த திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ' தனது பெயர் சஞ்சீவ். விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். ராயல் என்ஃபீல்டு வாகனம் மீது எனக்கு அதீத ப்ரியம். அதனால் உங்கள் ஷோருமில் வாங்க விரும்புகிறேன். எனவே வாகனத்தை சோதனை ஓட்டம் செய்வதற்காக விழுப்புரம் வெளியில் உள்ள முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு வரமுடியுமா?' எனக் கேட்டுள்ளார்.
அவரது கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த பைக் ஷோரூம் ஊழியர்கள், ' எங்களது விற்பனை நிலையத்துக்கு நேரில் வந்தால் மட்டுமே சோதனை ஓட்டத்துக்கு அனுமதிக்க முடியும்' என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து மாலை 6.30 மணியளவில் ராயல் என்ஃபீல்டு பைக் விற்பனை நிலையத்துக்கு, அந்த நபர் காரில் வந்து இறங்கியுள்ளார். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு பைக் குறித்து ஷோரூம் ஊழியர்கள் விளக்கியுள்ளனர். இதையடுத்து, மீண்டும் சோதனை ஓட்டம் செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளார்.
சோதனை ஓட்டத்தின்போது தன்னுடன் எந்த ஊழியரும் வரக்கூடாது எனவும் அடம் பிடித்துள்ளார். பின்னர் வாடிக்கையாளரின் சொல்லுக்கு ஏற்ப ஷோரூம் ஊழியர்கள், அவரிடம் இருந்த ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு சோதனை ஓட்டத்திற்கு அனுமதித்துள்ளனர்.