விழுப்புரம்: பானாம்பட்டு பாதை ஊரல் கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் அர்ச்சுனன் (28). நேற்றிரவு (டிச.3) அர்ச்சுனன் விழுப்புரம் பகுதியில் இருந்து பானாம்பட்டு ரோட்டில் உள்ள ஆட்டோ நிறுத்தத்துக்கு செல்வதற்காக ஆட்டோவில் சவிதா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநர் அர்ச்சுனன் பேருந்தின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு உயிரிழந்தார். உடனே சக ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்து ஓட்டுநரை மடக்கி பிடிக்க முயன்றனர்.
பேருந்து மோதி விபத்து
அச்சம் அடைந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அருகில் உள்ள விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்தின் அனைத்து கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். தொடர்ந்து பேருந்துக்கு தீவைத்தனர்.